2 அக்., 2009

காந்தியத்தை நாம் தொலைத்து விட்டோமா


இது காந்தி பிறந்த மண்
  
கடந்த முறை எனது சென்னை பயணம் எனக்கு ஒரு புதுமையான அனுபவமாக பட்டது, சென்னை புறநகர் பகுதியில் எனது நன்பர் ஒருவரை பார்க்க சென்று கொண்டு இருந்தேன். சில அடிதூரத்தில் ஒரு அம்மன் கோவிலில் திருவிழா மக்கள் நடமாட்ட அதிகம் இருந்த பகுதி. அந்த ரோட்டின் மறுபகுதியில் ஒரு 15 வயது சிறுவனை 18, 19 வயது கொண்ட 4 இளைஞர்கள் தாக்கி கொண்டு இருந்தனர். அந்த பகுதியில் சென்றவர்கள் அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தார்களே தவிர யாரும் அவர்களை விலக்கிவிட தயாராக இல்லை, நான் சென்ற அந்த நிமிடபொழுதில் அந்த இளைஞர் துவண்டு கிழே விழுந்துவிட்டான். இவர்கள் நால்வரும் அவனை மிதித்து கொண்டு இருந்தனர். நான் ஓடி சென்று அந்த சிறுவன் மீது அடிவிழாமல் அவனை தூக்க முயல அந்த நான்கு இளைஞர்களின் கோபம் என் மீது திரும்பிவிட்டது. நால்வரும் சேர்ந்து என்னை தாக்க முதலில் நான் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை, அடுத்த விநாடிகளில் சுதாரித்து கொண்டு இருவரின் கரங்களை பிடித்து என்னை பாதுகாக்க முயன்ற போது அந்த எதிர்பாராத நிகழ்ச்சி நடந்தது மூன்றாமவன் கீழே கிடந்த முழு செங்கலை எடுத்து எனது தலையில் அடிக்க மழை பெய்து செங்கல் ஈரமாக இருந்த காரணத்தால் செங்கல் எனது தலையில் பட்டு உடைந்துவிட்டது. இருப்பினும் அந்த அதிர்ச்சியில் நான் கீழேவிழுந்துவிட மற்றொரு செங்கல் எனது தோளை பதம் பார்த்தது, இத்தனைக்கும் ரோட்டில் போவோர் வருவோர் எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

நான் சுதாரிப்பதற்குள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள இருட்டில் தப்பி ஓடிவிட்டனர்.  அங்கிருந்து சில அடிதூரம் நின்று இருந்த போலீஸ் வேனில் இருந்து ஒரு காவலதிகாரி என்னை நோக்கி வந்து என்னை தூக்கி பிடித்தார். என்னிடம் வரிசைக்கிரமாக விசாரித்தார். முதலில் நான் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை, செங்கள் தாக்கியதில் தலையில் இருந்து லேசாக ரத்தம் கசிந்து அதுவும் நின்றுவிட்டது. நாம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த அதிகாரபூர்வ பத்திரிக்கையாளன், பத்திரிக்கை பணி ஒன்றிற்காக சென்னை வந்த சமயத்தில் இந்த தாக்குதல் நடந்தது.

வழக்கு பதிவு செய்யப்பட்டால் நான்கு பேர் மீதும் குண்டர் சட்டம் பாயும் என்பது உறுதி இதனால் நான் காவல் அதிகாரியிடம் ஒன்றும் சொல்லவில்லை, இதனிடையே முதலில் அடிவாங்கிய பையன் வழிகாட்டுதலில் என்னை தாக்கியவர்களில் ஒருவன் பிடிபட்டான். காவல் வண்டியில் அமர்ந்திருந்த உயரதிகாரி ஒருவர் என்னிடம் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுங்கள் அனைவரையும் பிடித்து உள்ளே போடுகிறேன் என்றார். அதற்குள் நான் யாரை பார்க்க சென்றேனோ அந்த நன்பர் வர அவருடன் புறப்பட்டு விட்டேன். போலீஸ் அதிகாரி திட்டாத குறைதான் உங்களை அடித்தவன் இவன் தான் ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுங்கள் என்றால் சும்மா போகிறீர்களே நீங்கள் என்ன பத்திரிக்கையாளர், இப்படி பயப்பட்டால் எப்படி பத்திரிக்கையாளனாய் இருக்க முடியும் என்றார். ஸ்டேட்மெண்ட் எழுதி கொடுக்க சில நிமிடம் ஆகாது, ஆனால் அந்த இளைஞர்களில் வாழ்க்கை வீனாகிவிடும் என்ற நோக்கத்தில் வலியை

தாங்கிகொண்டு அந்த நன்பருடன் நடந்தேன். இடையில் போலீஸ் பிடித்து வைத்துள்ள சகோதரனின் உறவினர் ஒருவர் என்னை பார்த்து ஒழுங்கா போய்கோ மவனே போட்டு தள்ளிவிடுவேன் என்று மிரட்டல் வேறு விட்டார். எனக்கு வலி எல்லாம் போல் மிக்கி மவுஸில் வரும் புளுட்டோ என்னை மிரட்டுவது போல் இருக்க சிரிப்பை அடக்கி கொண்டேன்.
-----------------------------------------------------------------------------------------------------
பூனாவில் இருந்து மும்பைக்கு குஜராத்தை சேர்ந்த கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு குடும்பம் வந்து கொண்டு இருந்தது. பூனாவை அடுத்து உள்ள ஒரு நிலையத்தில் இரவு கட்டுமான பணியை முடித்து விட்டு ஏறிய சில இளைஞர்கள் ஜன்னல் அருகில் அமர போட்டி இட்டனர். அந்த குடும்பத்தில் 4 ஆண்கள் ஒரு பெண் அந்த பெண் 4 மாத கற்பினியாக வேறு இருந்தாள், இந்த சிறிய சலசலப்பு பிரச்சனையாக வெடிக்க அந்த குஜராத்திய குடும்பத்தாரை இவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். ரெயில் லோனா வாலாவை வந்து அடைய அங்கு போலீஸில் பூகார் செய்தால் போலீஸார் தொந்தரவு செய்தவர்களை வெறும் மிரட்டல் செய்துவிட்டு விட்டுவிட ரெயில் கர்ஜத்தை அடைந்ததும் அவர்களுடம் வேறு சிலரும் சேர்ந்து கொள்ள குஜராத்திய குடும்பத்தார் அனைவரும் டாய்லெட்டுக்குள் சென்று கதவை தாளிட்டுகொண்டனர். ஆனால் கதவை உடைத்து அந்த பெண்ணின் கணவரை கத்தியால் குத்தியும் வெட்டியும் கொலை செய்துவிட்டு கல்யானை நெருங்கி கொண்டு இருந்த போது பிணத்தை எறிந்துவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். இவர்கள் அனைவருக்கும் கத்தி குத்து காயங்கள், இத்தனைக்கும் வண்டியில் பல இருந்தனர். கல்யான் இறங்கியதும் இவர்கள் போலீஸில் புகார் சொல்ல மறுநாள் ஒருவர் கைது செய்யபட அதன் பிறகு மற்ற மூவர் மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதில் ஒருவர் தமிழர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------
மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ஒன்று சயான் கோலிவாடா , மராட்டிய அரசின்  வீட்டுவசதி துறையினரால் கட்டபட்ட கட்டிடம் ஒன்றில் தனது இரண்டு குழந்தைகளுடம் தமிழ் பெண் ஒருவர் வசித்து வந்தார். கடந்த செவ்வாய் அன்று மாலை சரியாக 6:30 மணி அளவில் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் வெளியில் சென்று விட்ட நிலையில் தனியாக இருந்த தமிழ் பெண்ணிடம் அதே பகுதியை சேர்ந்த நால்வர் வலுக்கட்டாயமாக வீட்டிற்கு புகுந்து அந்த பெண்ணை கற்பழித்தது மட்டுமல்லாமல் இறுதியா அந்த பெண்ணின் உடலில் தீவைத்து கொளுத்தினர்.
அந்த நேரம் பார்த்து பாதிக்கபட்ட பெண்ணின் தங்கை வந்து கதவை தட்டியபோது கதவின் உட்புறம் தாழிடபட்டு இருந்தது, மேலும் உள்ளிருந்த கூக்குரல் கேட்டதும் வெளியில் இருந்தவர் அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைக்க அனைவரும் வந்து கதவை உடைத்து பாதி எரிந்து கொண்டு இருந்த நிலையில் இருந்த பெண்ணை காப்பாற்றி மும்பை சயான் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிர் விட்டார். குற்றவாளிகள் அனைவரும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் , மும்பை போலீசார் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்தனர்.
கைது செய்யபட்டவர்களில் ராஜேஸ்(வயது 30) நித்தியன்(28) சங்கர்(35) குமார்(25) அனைவரும் தமிழர் என்பதும் குறிப்பிடதக்கது.
----------------------------------------------------------------
மேலே சொன்னவை எல்லாம் பல குழுக்கள் சேர்ந்து செய்த தவறுகள், ஆனால் ஹரியானாவில் ஒரு பெண் தனது 6 உறுப்பினர் கொண்ட குடும்பத்தை ஒவ்வொன்றாக கொலை செய்துள்ளார். முதலில் காதலனுடன் சேர்ந்து கொலை செய்தாள்  என்று தகவல் வந்தாலும் விசாரனையில் தானே தனியாக இத்தனை கொலையையும் செய்து இருக்கிறார்.
----------------------------------------------------------------------------
 தனி மனித மனம் ஏன் இப்படி வக்கிர புத்தியில் மாறியது, சென்னை பூனா சம்பவங்கள் ஆத்திரத்தில் நிகழ்ந்தவை என்றாலும் அவர்களின் மனம் சிறிதளவேனும் யோசிக்க வில்லை, ஆனால் மும்பை, ஹரியானா சம்பவங்கள் தவறு செய்ய போகிறோம் என்று முன்னமே திட்டம் தீட்டி செய்திருக்கின்றனர். இது தனிப்பட்ட சம்பவங்களாக இருந்தாலும் காந்தியின் வழியில் வந்த சமுதாயத்தில் இது ஏன் நடக்கிறது, காந்தியத்தை நாம் தொலைத்து விட்டோமா அல்லது, காந்தியம் நமக்கு தவறாக பட்டதா






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக